ஸ்கூட்டரில் தோழியுடன் சென்ற மாணவியிடம் 5 பவுன் நகை பறிப்பு மர்ம நபர் கைவரிசை
ராஜாக்கமங்கலம் அருகே ஸ்கூட்டரில் தோழியுடன் சென்ற கல்லூரி மாணவியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராஜாக்கமங்கலம் அருகே விளாத்திவிளையை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 53). இவருடைய மகள் அமிர்தா (18). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று அமிர்தாவும் அவரது தோழி ஜோசியானாவும் நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ஜோசியானா ஓட்டி சென்றார். அமிர்தா பின்னால் அமர்ந்திருந்தார்.
இவர்கள் கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தார்.
அந்த நபர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்த நிலையில், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த அமிர்தாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை திடீரென பறித்தார். இதில் ஸ்கூட்டர் நிலைதடுமாறி அதில் பயணம் செய்த இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதற்கிடையே அந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றமர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story