கன்னியாகுமரி அருகே மீன் ஏற்றி சென்ற 11 டெம்போக்கள் சிறைபிடிப்பு
கன்னியாகுமரி அருகே மீன் ஏற்றி சென்ற 11 டெம்போக்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி,
இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து மீன்கள் வாகனங்களில் ஒற்றையால்விளை வழியாக வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் வாகனங்களில் இருந்து கழிவு நீர் வடிந்து சாலையில் தேங்குவதாகவும், வாகனங்களை சரியாக தார்பாய் போட்டு மூடாமல் செல்வதால் மீன்கள் சிதறி கீழே விழுந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று காலையில் ஒற்றையால்விளை முத்தாரம்மன் கோவில் முன்பு அந்த பகுதி மக்கள் திரண்டனர். அப்போது அந்த வழியாக மீன்ஏற்றி வந்த 11 டெம்போக்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வாகனங்களில் கொண்டு செல்லப்படும் மீன்கள் தார்பாய் மூலம் மூடி கொண்டு செல்லவும், கழிவுநீர் சாலையில் வடிவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story