பெரம்பலூர், அரியலூர் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


பெரம்பலூர், அரியலூர் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 24 Dec 2018 4:30 AM IST (Updated: 23 Dec 2018 10:12 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் கோவில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் 36-ம் ஆண்டு திருவாதிரை விழா மற்றும் ஆருத்ரா தரிசன விழா 2 நாட்கள் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீநடராஜபெருமானுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பரம்பரை ஸ்தானிகம், சுவாமி நாதசிவாச்சாரியார் நடத்திவைத்தார். நேற்று காலை வண்ணமலர்களால் ஸ்ரீநடராஜபெருமான்- சிவகாமி அம்பாள் உருவ சிலைகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீநடராஜபெருமான்- சிவகாமி அம்பாள் உருவ சிலைகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு, எடத்தெரு, செக்கடித்தெருவின் வழியாக வந்து தேரோடும் வீதிகளின் வழியே சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள ஸ்ரீதர்மசம்வர்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவில், வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்தில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், அரியலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் விசுவநாதர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று சாமி- அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story