ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் என்ன தவறு? மு.க.ஸ்டாலின் கேள்வி


ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் என்ன தவறு? மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 23 Dec 2018 11:15 PM GMT (Updated: 23 Dec 2018 5:40 PM GMT)

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் என்ன தவறு இருக்கிறது? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று நடைபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

செஞ்சி,

அண்மையிலே தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவிலே நான் பேசுகின்ற நேரத்தில் இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடியை ‘சேடிஸ்ட்’ என்று நான் சொன்னேன். அதை சொல்லலாமா, சொல்லக் கூடாதா? என்பது இன்றைக்கு ஒரு விவாத பொருளாகி இருக்கிறது.

நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கூட நான் பேசுகிற பொழுதுகூட அதை நான் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறேன். நான் சொன்னதில் என்ன தவறு, மோடியை தனிப்பட்ட முறையில் நான் ‘சேடிஸ்ட்’ என்று சொல்லவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார். பிரதமர் என்று சொன்னால் ஓட்டு போட்டவர்களுக்கும் அவர் தான் பிரதமர், ஓட்டு போடாதவர்களுக்கும் அவர் தான் பிரதமர். ஆகவே அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய பிரதமரை சொன்னதற்கு காரணங்கள் இருக்கிறது, ‘ஓகி’ புயலிலே, ‘வார்தா’ புயலிலே இப்பொழுது நடந்து இருக்கக்கூடிய ‘கஜா’ புயலிலே தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பாதிப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது. அதுவும் அண்மையில் ஏற்பட்ட ‘கஜா’ புயலால் 65 பேர்கள் மாண்டுபோய் இருக்கிறார்கள். அதற்கு ஏதாவது ஒரு ஆறுதல் செய்தி பிரதமரிடத்தில் இருந்து வந்ததா?. நேரடியாக வந்து பார்க்க அவசியமில்லை. காரணம் அவருக்கு நேரமில்லை. வெளிநாடு சுற்றுவதற்கே அவருக்கு நேரம் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார்.

ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்கிறது. ஆனால், வழங்கி இருக்கக்கூடிய தொகை ரூ.300 கோடி. அதுவும் ரூ.300 கோடி நிவாரணத்திற்காக வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் கிடையாது. தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்துகிற, தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், நான் தனிப்பட்ட மோடியை அல்ல, பா.ஜ.க.வை சேர்ந்த மோடியை அல்ல, பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சொல்கிறேன். “சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான்” என நான் ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன்.

அதனால் தான் மாற்றம் வேண்டும். மாற்றம் வேண்டும் என சொல்கின்ற பொழுது, யார் உடனடியாக ஒரு மாற்றத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தும் நிலையில் தலைவர் கருணாநிதி பலமுறை இந்திராகாந்தியை அழைத்து “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று முழங்கினார். சோனியாகாந்தியை அழைத்து “இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க” என சொன்னார்.

அதைத்தொடர்ந்து, அவர் வழி நின்று நான் சொன்னேன், “ராகுலே வருக, நிலையான ஆட்சி தருக” ஒரு நல்லாட்சியை தருக என சொன்னேன். இதில் என்ன தவறு?. சொல்லலாமா என கேட்கிறார்கள். நாங்கள் சொல்லாமல் யார் சொல்வது, சொன்னது உண்மை தான். ஆகவே ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்கிறார்கள். யாரும் இதை மறுக்கவில்லையே, யாராவது ராகுல்காந்தியை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது தவறு என்று யாராவது சொன்னார்களா, ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசியல் பிரச்சினைகள், அவர்களுக்குள் இருக்கக்கூடிய சில சங்கடங்கள் அதையெல்லாம் சரிசெய்து கொண்டு பின்னால் முடிவு செய்யலாம் என்று அந்தந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய சில தலைவர்கள் கருதுகிறார்கள்.

யாரும் சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவிலே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தவறு என்று யாரும் சொல்லவில்லை, இதுதான் உண்மை. ராகுல்காந்தியை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. இப்பொழுது அறிவிக்க வேண்டாம், அத்தனை பேரையும் ஒன்று திரட்டுவோம், எப்படி தமிழ்நாட்டில் தலைதூக்க விடாமல் பா.ஜ.க.வை அடியோடு விரட்டிக் கொண்டிருக்கின்றோமோ, அதுபோல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பா.ஜ.க. என்ற வாசனையே இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவோம் என உறுதியெடுக்கக்கூடிய நிலையில் தான் இன்று நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story