பணியில் இருந்த கண்டக்டர் சாவு; அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்
பணியில் இருந்த கண்டக்டர் பரிதாபமாக இறந்தார். அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 53). இவர் மலைக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக கிளையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் கிராமம் வரை செல்லும் டவுன் பஸ்சில் பணிக்கு செல்வது வழக்கம்.
இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 7–ந் தேதி அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டார். ஆனால் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் பணிக்கு வந்துள்ளார். கடந்த 8–ந் தேதி பணியில் இருந்தபோது, திடீரென பஸ்சில் இருந்து மயங்கி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். மயக்க நிலையில் இருந்த ராஜாராமுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் மலைக்கோட்டை போக்குவரத்துக்கழக பணிமனையில் பணியாற்றி வந்த மற்றொரு கண்டக்டர் காமராஜும் உடல்நலக்குறைபாடு காரணமாக நேற்று இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த மலைக்கோட்டை கிளை போக்குவரத்துக்கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
அவர்கள் நேற்று பகல் மலைக்கோட்டை கிளையின் நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுமுறை கொடுக்காமல் தொழிலாளியின் மரணத்துக்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். போக்குவரத்துக்கழக ஊழியர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக நேற்று பகல் 12 மணி முதல் பணிமனையில் இருந்து செல்ல வேண்டிய 50–க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் வெளியே செல்லவில்லை. இதனால் அரசு பஸ்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘‘மலைக்கோட்டை கிளையில் டிரைவர், கண்டக்டர் உள்பட 600 பேர் பணியாற்றுகிறார்கள். விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம், மெமோ என பலவழிகளில் தொந்தரவு செய்து வருகிறார்கள். இதனால் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் பணிக்கு வந்த ராஜாராம் பலியாகிவிட்டார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனாதையாகி விட்டனர். மருத்துவமனைக்கு மட்டும் இன்னும் பல லட்சம் ரூபாய் கட்ட வேண்டி உள்ளது. இதற்கு நிர்வாகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து போக்குவரத்துக்கழக புறநகர் கோட்ட மேலாளர் சங்கர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியர்களுக்கு மாதத்துக்கு குறிப்பிட்ட நாட்களில் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்படும். ஆப்சென்ட் செய்து இருந்தால் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து 3 மணிநேரத்துக்கு பிறகு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இந்த சம்பவம் நேற்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.