நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து தேர்தல் அறிக்கை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து தேர்தல் அறிக்கை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:00 AM IST (Updated: 23 Dec 2018 11:22 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

திருச்சி,

புதிய தொழில்முனைவோர் கருத்துக்கேட்பு கூட்டம் திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் சிறப்புஅழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:–

2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் அறிக்கையை 22 பேர் கொண்ட குழு பலதரப்பட்ட மக்களிடம் கருத்துக்கேட்டு தயாரிக்க காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இந்த குழுவின் தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் பொதுமக்கள், தனியார் அமைப்பினருடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. அறிஞர்கள், சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர்களையும் சந்தித்து பேசி உள்ளோம். தொழில்முனைவோராகிய நீங்கள் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெரிவியுங்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து தான் தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம். அதற்கு இதுபோன்ற கருத்துக்கேட்பு கூட்டங்கள் உதவுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து தொழில்முனைவோர் பலர் தங்களது கருத்துக்களை கூறினார்கள். சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வரும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும். சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு அரசின் அனுமதி பெறுவது, வங்கி கடன் பெறுவது போன்ற வி‌ஷயங்களில் பல்வேறு சிரமங்கள் இருக்கிறது. அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இதனை பள்ளி அளவில் இருந்தே தொடர வேண்டும். அப்போது தான் நிறைய தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும். ஆராய்ச்சி தொடர்பான தொழில்முனைவோருக்கு கூடுதல் சலுகைகளை வழங்கலாம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


Next Story