திண்டுக்கல்லில், பட்டப்பகலில் துணிகரம் அடுத்தடுத்து 2 பேரிடம் நகை பறிப்பு - போலீஸ் வலைவீச்சு
திண்டுக்கல்லில், பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 பேரிடம் நகை பறித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 50). நெசவு தொழிலாளி. இவர் நேற்று காலை 6 மணி அளவில் திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் நடைபயிற்சி செய்துகொண்டு இருந்தார். அவர், போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் அருகே உள்ள சித்த மருத்துவமனை பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் கண் இமைக்கும் நேரத்தில் அருள் செல்வம் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால், அவர் கூச்சல்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.
அவர் ஏ.எம்.சி. சாலை வழியாக தப்பி சென்றபோது, அந்த சாலையில் உள்ள ஜவுளிக்கடை அருகே பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அவரிடமும் அந்த நபர் கைவரிசை காட்டினார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர், அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த பெண், சங்கிலியை பிடித்துக்கொண்டு கூச்சல் போட்டார். இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால், அந்த நபர் நகையை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்ததும், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நகை பறித்த நபரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் நடந்த சிறிது நேரத்தில், திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் ஒரு நகை பறிப்பு சம்பவம் நடந்தது. அதாவது, திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோட்டை சேர்ந்தவர் தென்னடி. இவருடைய மனைவி விக்டோரியா லூர்து ஜெயமேரி (55). இவருடைய மகன் கோவையில் வசித்து வருகிறார்.
அவரை பார்க்க விக்டோரியா லூர்து ஜெயமேரி கோவைக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக நேற்று காலையில் அவரை, தென்னடி மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே பஸ் சென்றுவிட்டது. இதனால் பழனி பைபாஸ் சாலையில் பஸ் ஏற்றி விடுவதற்காக தென்னடி, மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் முருகபவனம் பகுதியில் சென்றபோது, பின்னால் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவர் கண் இமைக்கும் நேரத்தில் விக்டோரியா லூர்து ஜெயமேரி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு, மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதுகுறித்து தென்னடி, திண்டுக்கல் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்தவரை வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் பட்டப்பகலில் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story