கூடலூர் அருகே புளியந்தோப்புக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் - விவசாயிகள் அச்சம்
கூடலூர் அருகே புளியமரந்தோப்புக்குள் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே பளியன்குடியிருப்பு பகுதி உள்ளது. இது மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து மான், யானை, கரடி, குரங்கு, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவலுக்கு சென்று உரக்க சப்தம் இட்டும், தகரங்களை தட்டி ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் வனவிலங்குகளை விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பளியன்குடியிருப்பு அருகில் கூடலூரை சேர்ந்த மசுதுமுகமது என்பவருடைய புளியந்தோப்புக்குள் காட்டுயானைகள் புகுந்தன. அங்கு தோப்பில் இருந்த புளியமரக்கிளைகளை உடைத்தும் நாசமாக்கின. பின்னர் காட்டுயானைகள் கூட்டம் அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாயக்கர்தொழு பகுதியில் பெருமாயி என்பவரது இலவம் தோப்புக்குள் யானைகள் புகுந்து இலவம் மரங்களை வேருடன் சாய்த்தும் அதன் பட்டைகளை உறித்து சேதப்படுத்தியது. வெட்டுக்காடு சிவில்ராம் படுகை பகுதியில் பேச்சியம்மாள், மாயாண்டி ஆகியோருடைய தோட்டங்களுக்குள் புகுந்து செவ்வாழை மரங்களை நாசமாக்கியது.
பளியன்குடி பகுதியில் ஆனந்தன் என்பவருடைய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 5-க்கும் மேற்பட்ட யானைகள் பளியன்குடியிருப்பு பகுதியையொட்டியுள்ள பாப்பான் ஓடை, வாழ்த்துபடுகை, வேளான்காடு, கொல்லுகவுடர் முடக்கு ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிவதால் விளைநிலங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
எனவே விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர்் அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story