அடையாறில் குளியல் அறையில் பெண் மர்ம சாவு


அடையாறில் குளியல் அறையில் பெண் மர்ம சாவு
x
தினத்தந்தி 24 Dec 2018 3:00 AM IST (Updated: 24 Dec 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறில் வீட்டின் குளியல் அறையில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடையாறு,

சென்னை அடையாறு இந்திரா நகர் 2-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீசரண் (வயது 33). சாப்ட்வேர் என் ஜினீயரான இவர், அமெரிக் காவில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கண்மணி (28). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்அமராவதியில் உள்ள கண் மணியின் தந்தை மரணம் அடைந்தார். இதற்காக அமெரிக்காவில் இருந்து குடும்பத்துடன் சென்னை வந்த ஸ்ரீசரண், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் சென்னை திரும்பி வந்தனர்.

மனைவி மற்றும் குழந்தையை சென்னையில் தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு ஸ்ரீசரண் மட்டும் நேற்று அதிகாலையில் விமானம் மூலம் மீண்டும் அமெரிக்கா சென்று விட்டார். நேற்று காலை வீட்டின் குளியல் அறைக்கு சென்ற கண்மணி, நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. குழந்தை அழுததால் கண் மணியின் மாமியார், குளியல் அறை கதவை தட்டினார்.

ஆனால் கண்மணியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தனர். அதில், குளியல் அறையில் கண்மணி மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கண்மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அடையாறு போலீசார், பலியான கண்மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கண்மணி சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story