கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 24 Dec 2018 4:15 AM IST (Updated: 24 Dec 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

நாமக்கல், 

கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் சுமார் 140 அடி உயரத்தில் இருந்து பால்போல் தண்ணீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சி ஆகும். எனவே இதை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது அதிக அளவு தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடை விதித்து இருந்தனர்.

தற்போது மழை இல்லாத காரணத்தால் அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. இருப்பினும் இந்த தண்ணீர் குளிப்பதற்கு போதுமானதாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வதை பார்க்க முடிகிறது. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

வழக்கமான நாட்களில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு 200 பேர் மட்டுமே வருவார்கள். ஆனால் நேற்று சுமார் 500 பேர் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் புத்தாண்டு வரை சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story