தூத்துக்குடி அருகே ரோட்டில் இறந்து கிடந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதல் வாலிபர் படுகாயம்
தூத்துக்குடி அருகே ரோட்டில் இறந்து கிடந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி அருகே ரோட்டில் இறந்து கிடந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
மாடுகள்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை திருச்செந்தூர் ரோட்டில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு ரோடுகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இருள் சூழ்ந்த அந்த பகுதியில் மாடுகள் சுதந்திரமாக ரோடுகளில் சுற்றித்திரிகின்றன.
வாலிபர் படுகாயம்
இந்த நிலையில் நேற்று இரவு முள்ளக்காடு அருகே வழக்கம் போல் ஒரு பசுமாடு ரோட்டை கடந்தது. அப்போது, அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதியது. இதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.
அதே நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து புன்னக்காயல் நோக்கி ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இருள் சூழ்ந்து இருந்ததால், அந்த வாலிபர் ரோட்டில் மாடு இறந்து கிடந்ததை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் மாட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் பலத்த காயம் அடைந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உடனடியாக அந்த வாலிபரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முள்ளக்காடு பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். ரோடுகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story