கோவையில் தினமும் 200 கிலோ கஞ்சா விற்பனை செய்தது அம்பலம் - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்


கோவையில் தினமும் 200 கிலோ கஞ்சா விற்பனை செய்தது அம்பலம் - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 Dec 2018 3:30 AM IST (Updated: 24 Dec 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தினமும் 200 கிலோ கஞ்சா விற்பனை செய்ததாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை,

கோவை வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 53). கஞ்சா மொத்த வியாபாரி. இவரிடம் மதுரையை சேர்ந்த வேலன் (48), அவருடைய தங்கை ஈஸ்வரி (45), பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அசோக் (31), சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த முகமது ரபீக்(23), கோகுல கண்ணன் (23), தினேஷ்பாபு (25), பிரவீன் (25), முஜிபுர்ரகுமான் (30) ஆகியோர் கஞ்சா வியாபார தொடர்பில் இருந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி வேலன், ஈஸ்வரி உள்பட 7 பேர் கைதானார்கள். அவர்களிடம் இருந்து 110 கிலோ கஞ்சா, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்திவேல் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் வீரகேரளம் பகுதியில் பதுங்கி இருந்த சக்திவேலை, பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதான சக்திவேல் கடந்த 17 ஆண்டுகளாக கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். தினமும் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு சக்திவேல் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் அரசியல்வாதிபோல் காட்டிக்கொண்டு நடமாடி வந்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் உள்ள பாடகிரி மலையில் கஞ்சா கிடைக்கிறது. அங்கு முத்துலட்சுமி (45) என்ற பெண் மலைக்கு சென்று கஞ்சா வாங்கி, வேலன், ஈஸ்வரி ஆகியோருக்கு கொடுப்பார். அவர்கள் கார், ஜீப் மூலமாக கோவைக்கு கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பார்கள்.

பாடகிரி மலையில் ஒரு கிலோ கஞ்சா 1000 ரூபாய்க்கு கிடைக்கும். ஒரு கிலோ கஞ்சாவை ரூ.7 ஆயிரம் கொடுத்து வாங்குவேன். கஞ்சாவை வாங்கி 10 கிராம், 20 கிராம், பாக்கெட்டுகளாக தயாரித்து 50 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்பனை செய்வேன். கஞ்சா வாங்க சிறு வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக என்னை தேடி வருவார்கள். கோவை நகரில் தினமும் 200 கிலோ கஞ்சா, பொட்டலமாக விற்பனையாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைதான சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துலட்சுமி, முஜிபுர் ரகுமான் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story