கண் தெரியாமல் ரோட்டில் கிடந்த நாகப்பாம்பை மருத்துவமனையில் சேர்த்த கோவை காவலாளி - 90 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு வந்தார்
கண் தெரியாமல் ரோட்டில் கிடந்த நாகப்பாம்பை 90 கிலோ மீட்டர் தூரம் மோட்டார்சைக்கிளிலேயே கொண்டு வந்து காவலாளி ஒருவர் மருத்துவமனையில் சேர்த்தார்.
பவானிசாகர்,
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வருகிறார். சுரேந்திரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் சென்றபோது சாலையில் லேசான காயம் அடைந்தநிலையில் ஒரு நாகப்பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த பாம்பை காப்பாற்ற விரும்பினார். உடனே மோட்டார்சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினார். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த பாம்பை லாவகமாக பிடித்து தான் வைத்திருந்த ஒரு பையில் போட்டார். இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 90 கி.மீ. தூரம் கடந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
அங்கு டாக்டர் அசோகன் பாம்பை பரிசோதனை செய்து பார்த்தார். அதில் பாம்புக்கு 2 கண்களும் தெரியவில்லை என்பதும், இரை கிடைக்காமல் சோர்ந்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சத்தியமங்கலம் தனியார் கண் மருத்துவமனை டாக்டரின் ஆலோசனையின் படி பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் அசோகன் கூறும்போது, ‘கண் டாக்டரின் ஆலோசனைப்படி பாம்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாம்புக்கு கண் தெரிய வாய்ப்புள்ளது. பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என்பார்கள்.
மேலும் பதறிப் போய் அடித்து கொல்லும் இந்த காலத்தில் அதை எடுத்து பையில் போட்டு 90 கி.மீ. தூரம் எடுத்து வந்து சிகிச்சைக்கு ஒப்படைத்த சுரேந்திரனின் செயல் பாராட்டத்தக்கது என்றார். சுரேந்திரனின் இந்த செயலுக்கு வனத்துறையினரும் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story