சேலம் மணக்காட்டில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கி திருட முயற்சி 2 பேர் தப்பி ஓட்டம்
சேலம் மணக்காட்டில் வீட்டில் இருந்த முன்னாள் ராணுவ வீரரை தாக்கி 2 பேர் திருட முயன்ற சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் மணக்காடு ராஜகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 72), முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அசந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் 2 பேர் திடீரென நுழைந்தனர். பின்னர் திருடர்கள் வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றதை அறிந்த ஜெயராமன், திருடன்..! திருடன்..! என சத்தம்போட்டு கூச்சலிட தொடங்கினார்.
பின்னர் திருடர்கள் 2 பேரும், தங்களது கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் முதியவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இந்த தகவலை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஆனால் திருடர்கள் யார்? எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணக்காடு, அன்பு நகர், ராஜகணபதி நகர் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர்கள், வக்கீல்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் என பலரும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஒரு கும்பலை சேர்ந்த திருடர்கள், வீடுகளை நோட்டமிட்டு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயற்சி செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, திருட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்க அஸ்தம்பட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது போல், அஸ்தம்பட்டி பகுதிகளில் குடியிருப்புகள் நிறைந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story