மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு?


மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு?
x
தினத்தந்தி 24 Dec 2018 4:00 AM IST (Updated: 24 Dec 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு, 

மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோதல் பகிரங்கமாக வெடித்தது

நகரசபை நிர்வாகத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. அவர் பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் இருந்தார். அவருக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானது.

இந்த விஷயத்தில் மந்திரி டி.கே.சிவக்குமார், லட்சுமி ஹெப்பால்கருக்கு ஆதரவாக செயல்பட்டார். இதற்கு ரமேஷ் ஜார்கிகோளி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. இந்த பிரச்சினையை சித்தராமையா தலையிட்டு தீர்த்து வைத்தார்.

நெருக்கமாக பழகி வந்தார்

ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி, மந்திரிசபை கூட்டத்தை தொடர்ந்து 4 முறை புறக்கணித்தார். தனது துறை தொடர்பாக எந்த பணியிலும் சரியான முறையில் ஈடுபடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் பா.ஜனதா தலைவர்களுடன் அவர் நெருக்கமாக பழகி வந்தார். பா.ஜனதாவினர் நடத்திய விருந்தில் அவர் பங்கேற்றார். இதனால் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தது.

உரையாடல் பதிவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பதவியை இழந்த அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

மேலும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது ஆதரவாளர் ஒருவரிடம் ரமேஷ் ஜார்கிகோளி செல்போனில் பேசிய உரையாடல் பதிவு வெளியானது. அதில் பேசியுள்ள ரமேஷ் ஜார்கிகோளி, இன்னும் ஒரு வாரத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கூட்டணி அரசுக்கு சிக்கல்

அவருடன் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினால், கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story