இந்தியாவில் பணக்கார மந்திரியானார், எம்.டி.பி.நாகராஜ் ரூ.1,015 கோடி சொத்துக்கு சொந்தக்காரர்


இந்தியாவில் பணக்கார மந்திரியானார், எம்.டி.பி.நாகராஜ் ரூ.1,015 கோடி சொத்துக்கு சொந்தக்காரர்
x
தினத்தந்தி 24 Dec 2018 4:30 AM IST (Updated: 24 Dec 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக மந்திரி பொறுப்பு ஏற்ற எம்.டி.பி.நாகராஜ், இந்தியாவில் பணக்கார மந்திரியாக உள்ளார். 8-ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர் ரூ.1,015 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் புதிதாக மந்திரி பொறுப்பு ஏற்ற எம்.டி.பி.நாகராஜ், இந்தியாவில் பணக்கார மந்திரியாக உள்ளார். 8-ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர் ரூ.1,015 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆவார்.

எம்.டி.பி.நாகராஜ்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி, முதல்-மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில் குமாரசாமி தலைமையிலான மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் புதிய மந்திரிகளாக பொறுப்பு ஏற்று கொண்டனர்.

இவர்களில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான எம்.டி.பி.நாகராஜ் அடங்குவார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள எம்.டி.பி.நாகராஜிக்கு, 66 வயது ஆகிறது. குருபா இனத்தை சேர்ந்த இவர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். தற்போது நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருடனும் நெருக்கமாக இருக்கிறார்.

ரூ.1,015 கோடி சொத்து

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி எம்.எல்.ஏ.வாக இருந்த எம்.டி.பி. நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.1,015 கோடியாகும். இதில் ரூ.437 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.578 கோடி அசையா சொத்தாகவும் உள்ளது. தற்போது அவர் மந்திரியாக பொறுப்பு ஏற்று உள்ளதன் மூலம் இந்தியாவின் பணக்கார மந்திரி என்ற பெருமை அவரை சேர்ந்துள்ளது.

முன்னதாக, கடந்த 2016-17-ம் ஆண்டில் எம்.டி.பி. நாகராஜ் ரூ.104 கோடிக்கு வருமான வரி செலுத்தினார். இந்த ஆண்டில் அவருடைய மனைவி உள்பட குடும்பத்தினர் சார்பில் ரூ.157 கோடிக்கு வருமான வரி செலுத்தி உள்ளது. எம்.டி.பி. நாகராஜூவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு நிதி வழங்குவதில் முக்கிய பங்கு ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story