அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் தகனம்


அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் தகனம்
x
தினத்தந்தி 24 Dec 2018 3:41 AM IST (Updated: 24 Dec 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுவையை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73). சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் கடந்த 21-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது உடல் நேற்று பாரதி வீதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பிரபஞ்சனின் உடலுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளன் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், பிரபஞ்சனின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்றார்.

பின்னர் ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்த ராமன், சிவா, வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விசுவ நாதன், நக்கீரன் கோபால், அரசு செயலாளர் அன்பரசு உள்பட தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், சமூக அமைப்பினர் பிரபஞ்சனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

மாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரபஞ்சனின் உடல் சன்னியாசித்தோப்பு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல்மேல் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டு மூத்த மகன் கவுதமனிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு மூத்த மகன் கவுதமன் தீ மூட்டினார்.

Next Story