காப்பீடு புதுப்பித்தலுக்கு எனக்கூறி கியாஸ் சிலிண்டர் நுகர்வோரிடம் வசூலித்த பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை - கலெக்டருக்கு கோரிக்கை
காப்பீடு புதுப்பித்தலுக்கு எனக்கூறி வசூலித்த பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்கக்கோரி கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்கு கூடலூர் பகுதி சமையல் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் நுகர்வோரிடம் இருந்து காப்பீடு புதுப்பித்தலுக்கு எனக்கூறி சம்பந்தப்பட்ட முகவர்கள் தலா ரூ.177 வசூல் செய்து உள்ளனர். இதற்காக கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் ஏஜென்சிகளின் ரசீது வழங்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக கேட்டபோது, கியாஸ் சிலிண்டர்களால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு பெறுவதற்கான காப்பீடு புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் நேரில் ஆய்வு நடத்தி காப்பீடு தொகை புதுப்பித்தல் தொகை வசூலிக்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் பணம் வழங்க மறுத்து விட்டதால், அடுத்த மாதம் உங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைக்காது, விபத்து ஏற்பட்டால் இழப்பீடும் வழங்கப்படமாட்டாது என்று சம்பந்தப்பட்ட முகவர்கள் கூறியதாக தெரிகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சமையல் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்களிடம் ரசீது கொடுத்து பணம் வசூலிக்கின்றனர்.
கியாஸ் சிலிண்டருக்கு பணம் செலுத்தும்போது விபத்துக்கான காப்பீடு தொகையையும் சேர்த்து வழங்கப்படுகிறது. மேலும் கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பெட்ரோலிய நிறுவனங்கள் இழப்பீடு தொகையை வழங்குகிறது. ஆனால் கியாஸ் சிலிண்டர்கள் முகவர்கள் பெயரில் எதற்காக பணம் வசூலிக்கிறார்கள்? என்று தெரியவில்லை. மேலும் அந்த ரசீதில் சிலிண்டர்கள் பராமரிப்பு ஆய்வுக்கான கட்டணம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் பராமரிப்பு பணிக்கு வந்த நபர்கள் எந்தவித உபகரணங்களும் கொண்டு வந்து ஆய்வு நடத்தாமல் பணம் மட்டுமே வசூலித்து செல்கின்றனர். இது சம்பந்தமாக பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்தவித பணமும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பது இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. எனவே தனியார் முகவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மேலும் நுகர்வோரிடம் இருந்து ஏற்கனவே வசூலித்த பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story