திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே வாகனம் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் படுகாயம் - 108-க்கு அழைத்தபோது 2 தனியார் ஆம்புலன்ஸ் வந்ததால் பரபரப்பு


திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே வாகனம் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் படுகாயம் - 108-க்கு அழைத்தபோது 2 தனியார் ஆம்புலன்ஸ் வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Dec 2018 10:00 PM GMT (Updated: 24 Dec 2018 12:15 AM GMT)

திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த மாற்றுத்திறனாளி முதியவரை அழைத்து செல்ல 108-க்கு அழைத்தபோது 2 தனியார் ஆம்புலன்ஸ்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வேலன்நகர் பகுதியை சேர்ந்த 70 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி முதியவர் வேலாயுதம் என்பவர் நேற்றுமாலை அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதி சமூக ஆர்வலர் பழனிகுமார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சாஸ்தா என்ற தனியார் ஆம்புலன்ஸ் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் ஒரு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது.

பின்னர் அந்த முதியவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச்செல்லுமாறு பழனிக்குமார் மற்றும் அப்பகுதி மக்கள் 2 ஆம்புலன்ஸ் டிரைவர்களிடமும் கூறி உள்ளனர். ஆனால் சாஸ்தா ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ரூ.2ஆயிரத்து 700 முதல் ரூ.4ஆயிரம் வரை கேட்டுள்ளார். ஆனால் முதியவரிடம் பணம் இல்லாததால் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை ஏற்றி செல்ல மறுத்துவிட்டார்.

பின்னர் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முதியவரை இலவசமாக ஏற்றிச் செல்ல சம்மதித்தார். ஆனால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாது என்றும் தங்கள் ஆஸ்பத்திரிக்கு மட்டுமே அழைத்து செல்ல முடியும் என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் படுகாயமடைந்த முதியவரை அவருடைய மகன் கணேசன் அவருடைய மோட்டார் சைக்கிளில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

பின்னர் சமூக ஆர்வலர் பழனிக்குமார் மற்றும் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம், 108 ஆம்புலன்ஸ்க்கு மட்டுமே நாங்கள் தகவல் தெரிவித்தோம். ஆனால் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்றும், உங்களுக்கும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் என்ன ஒப்பந்தம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி 2 ஆம்புலன்ஸ்களையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகே 108 ஆம்புலன்சு சம்பவ இடத்திற்கு சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story