உணவு வணிகர்கள் உரிமம், பதிவுச்சான்று பெற தவறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


உணவு வணிகர்கள் உரிமம், பதிவுச்சான்று பெற தவறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2018 4:30 AM IST (Updated: 24 Dec 2018 9:40 PM IST)
t-max-icont-min-icon

உணவு வணிகர்கள் உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

உணவு வணிகம் மேற்கொள்பவர்களுக்காக இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் 5.8.2011 முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் உணவு வணிகம் மேற்கொள்ளும் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் அல்லது பதிவு செய்தல் அத்தியாவசிய ஒன்றாகும்.

இம்மாவட்டத்தில் மொத்த உணவு வணிக நிறுவனங்கள் 17,207 ஆகும். இவற்றில் 96.28 சதவீத நிறுவனங்கள் உரிமம் பெற்று உள்ளன. இல்லை எனில் பதிவு செய்து உள்ளன. மீதமுள்ள 3.72 சதவீத நிறுவனங்கள் உரிமம் பெறவில்லை. பதிவும் செய்யவில்லை.

முன்பு உரிமம் அல்லது பதிவுபெற செலுத்து சீட்டின் மூலம் கருவூலத்தில் சீல் வைத்து, பாரத ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி அதன் பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கட்டாயம் ஆன்-லைன் மூலமாகதான் உரிமம் அல்லது பதிவு பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் www.foodlicensing.fssai.gov.in என்னும் இணையதள முகவரியிலும் உரிமம் மற்றும் பதிவுச்சான்று வேண்டி விண்ணப்பிக்கலாம். உணவுபாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்று பெறாமல் உணவு வணிகம் மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, உணவு வணிகர்கள் தாங்களே முன்வந்து உடனடியாக தங்களது வணிகத்திற்கு உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்றிட வேண்டும். தவறினால் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள், சேமித்து வைப்பவர்கள், வாகனங்களில் எடுத்துச்செல்பவர்கள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், பால்காரர்கள், கோழி, ஆடு, மீன் இறைச்சி விற்பனையாளர்கள், பழக்கடை நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்கள் தயாரிப்பு நிலையில் இருந்து பொது மக்கள் உண்ணும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், உரிமம் தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்களையோ, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். மேலும், உணவு பாதுகாப்புதுறை பற்றிய புகார்களை 94440-42322 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story