விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம் நாளை மறுநாள் மூலக்கரையில் நடக்கிறது


விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம் நாளை மறுநாள் மூலக்கரையில் நடக்கிறது
x
தினத்தந்தி 25 Dec 2018 4:30 AM IST (Updated: 24 Dec 2018 10:10 PM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அரசியல் கட்சியினர் மூலக்கரையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

ஈரோடு, 

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்டங்களில் கடந்த 17-ந் தேதி முதல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 8-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாறியது. ஈரோடு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் 6 பெண்களும் 5 ஆண்களும் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். தொடர்ந்து இரவிலும் போராட்டத்தை நடத்திய அவர்கள் 2-வது நாளாக நேற்றும் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி நடத்தினார்கள். ஒரே பந்தலில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் ஆகியவை நடந்தது.

போராட்டத்துக்கு, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார். பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து பேசினார்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டமும் நேற்று போராட்ட பந்தலிலேயே நடந்தது.

இந்த கூட்டத்துக்கு ம.தி.மு.க. மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, வில்லரசம்பட்டி முன்னாள் தலைவர் ஏ.முருகேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நா.விநாயகமூர்த்தி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ப.கோபால், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏ.சித்திக், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஆரிப், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தொழிற்சங்க செயலாளர் ஜெகநாதன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கவுதம் தமிழ்மணி, மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தம் ராஜேஸ், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் பொறுப்பாளர் சக்தி சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்துச்செல்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து ம.தி.மு.க. மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த திட்டத்துக்கு மாற்று திட்டமாக கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து அரசு நல்ல தீர்வு அளிக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய -மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா, மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

அதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 27-ந் தேதி (நாளை மறுநாள்) அனைத்து அரசியல் கட்சியினர் சார்பில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம், மூலக்கரையில் காத்திருப்பு போராட்டம் நடந்து வரும் இடத்திலேயே நடைபெறும். இந்த போராட்டத்தின் பின்னரும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், அனைத்து கட்சி தலைவர்களிடமும் பேசி, மாநிலம் தழுவிய மிகப்பெரிய போராட்டமாக உயர்மின் கோபுர போராட்டம் நடத்தப்படும்.

இந்த போராட்டம் தொடர்பாக வக்கீல் ஈசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொருளாளர் அ.கணேசமூர்த்தி கூறினார்.

நேற்றைய போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சி.எம்.துளசிமணி, கவின் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story