தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி. தினகரன் பேச்சு
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
அருமனை,
அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 21-வது கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அருமனையில் நடைபெறும் மத நல்லிணக்க விழா சகோதரத்துவத்தை உணர்த்தும் விழாவாகும். கடந்தமுறை இந்த விழாவில் நான் கலந்து கொண்டேன். ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு பெரிய பதவியை கொடுத்தார்கள். இப்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெரிய இயக்கத்தின் துணை பொதுச்செயலாளராக உள்ளேன்.
நம்நாடு இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம், பவுத்தம், சீக்கியம் என பல மதங்களை கொண்ட நாடு. ஆனால், நாம் உணர்வால் இந்தியன், தமிழர்கள் என்ற சிந்தனையோடு வாழ்கிறோம்.
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முன்னேறும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தேசிய கட்சிகள் தமிழகத்தை புறக்கணிக்கின்றன. காவிரியில் நமது உரிமை மறுக்கப்படுகிறது. தமிழகம் பலம் பெற வேண்டும். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அண்ணாவின் கருத்தை வளர்க்க வேண்டும்.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையுடைய நாடாக விளங்குகிறது. இது எந்த நாட்டுக்கும் இல்லாத தனித்துவம் ஆகும். சகிப்புதன்மைதான் நம் நாட்டின் பலம். இந்திய பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழகம் திகழும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story