மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு தோல் கழிவு கலந்த தண்ணீர் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்
தோல் கழிவு கலந்த தண்ணீர் பாட்டிலுடன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர்.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
ஈரோடு நரிப்பள்ளம் சத்தி ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தோல் கழிவுநீர் கலந்த தண்ணீர் பாட்டில்களுடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
எங்கள் பகுதியில் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இரவு நேரத்தில் அந்த தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதால் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். அதன்பின்னர் மீண்டும் அந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதால் தற்போது செயல்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் மீண்டும் திறந்துவிடப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நாங்கள் பயன்படுத்தும் தண்ணீரில் தோல் கழிவு கலப்பதால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தோல் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தபிறகு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருவர் கழிவுநீர் பாட்டிலுடன் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
அந்தியூர் அருகே மைலம்பாடி போத்தநாயக்கன்புதூரை சேர்ந்த பொதுமக்கள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் துரைராஜா தலைமையில் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
சித்தோடு அருகே கோணவாய்க்கால் பிரிவு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை, பவானியை அடுத்த மைலம்பாடி கிராமத்திற்கு உள்பட்ட போத்தநாயக்கன்புதூரில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடை அமைய உள்ள பகுதிக்கு அருகில் தொடக்கப்பள்ளிக்கூடமும், மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமும் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
கோபிசெட்டிபாளையம் சிவசண்முகம் வீதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், “எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடக்கிறது. அதற்கு அருகில் மத வழிபாட்டு தலம், அரசு உயர்நிலை பள்ளிக்கூடம், தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பெறும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது”, என்று கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ந் தேதி முதல் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உள்பட 8 மாவட்டங்களில் விவசாயிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களை மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கொடுமுடி அருகே இச்சிப்பாளையம் தாமரைப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 35 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் எங்கள் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்து உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து குடிசையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறி இருந்தனர்.
ஈரோடு மாவட்ட கறவை மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “கோமாரி நோய் பாதிப்பு காரணமாக கடந்த 5 வாரங்களாக கால்நடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கால்நடைத்துறையின் நடவடிக்கை காரணமாக நோயின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. சந்தை நடத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகளும், விவசாயிகளும் வருமானம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சந்தையை நடத்த அனுமதிக்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு மாநகராட்சி சொட்டையம்பாளையம் மாதேஸ்வர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறோம். பட்டா இல்லாததால் எங்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.
பெருந்துறை தாலுகா பொன்னாண்டவலசு கிறிஸ்துவ காலனியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தின் முன்புறம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பந்தல் அமைக்கப்படும். இந்த ஆண்டு பந்தல் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி மறுக்கிறார்கள். எனவே ஆலயத்தின் முன்புறம் பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர். முன்னதாக அவர்கள் மனு கொடுக்க வந்தபோது, கிறிஸ்துவ ஆலயம் முன்பு பந்தல் அமைக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்றால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், “போராட்டம் நடத்தினால் கைது செய்வோம்”, என்றனர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு எல்லப்பாளையம் திட்டாங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிப்பதால் மின்சாதனங்கள் பழுதடைந்துவிடுவதாகவும், அதற்காக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கோரியும், விளக்கேத்தி விஜயநகரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரியும், எழுமாத்தூர் கனகாசல குமரன் பங்குனி உத்திர பக்தர்கள் சங்கத்தினர், கனகமலை அடிவாரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பினால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அதிகமான மரங்கள் வெட்டப்படுவதால் அடுக்குமாடி குடியிருப்பை வேறு இடத்தில் கட்டக்கோரியும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மொத்தம் 350 கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பிரதமரின் தேசிய நிவாரண திட்டத்தில் இருந்து அமில வீச்சால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு ரூ.53 ஆயிரத்து 420-க்கான காசோலைகளும், மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து ஒருவருக்கு விலையில்லா தையல் எந்திரமும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story