நெல்லை, மதுரை, கரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்படும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்


நெல்லை, மதுரை, கரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்படும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 25 Dec 2018 3:15 AM IST (Updated: 24 Dec 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

“நெல்லை, மதுரை, கரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்படும்“ என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.





நெல்லை,

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டி முடிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் உள்ளது. இங்கு அனைத்து நவீன கருவிகளும் நிறுவப்படுகின்றன. தற்போது 128 சிலைட் சி.டி. ஸ்கேன் கருவி உள்ளது. இந்த கருவி அரசு ஆஸ்பத்திரிகளில் சென்னைக்கு அடுத்தபடியாக நெல்லையில்தான் உள்ளது. நெல்லையில் கல்லீரல், சிறுநீரகம் உள்பட அனைத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இங்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் அமைக்க 80 சதவீதம் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த ஆஸ்பத்திரி அடுத்த மாதம் (ஜனவரி) 2-வது வாரத்தில் திறக்கப்படும். அதன்பிறகு படிப்படியாக இந்த ஆஸ்பத்திரி முழுமையான செயல்பாட்டுக்கு வரும். இதுகுறித்து முதல்-அமைச்சர், துறை அமைச்சருடன் கலந்து பேசியபின் ஆஸ்பத்திரி திறக்கப்படும். இதில் மத்திய அரசின் பங்கும் இருப்பதால் திறப்பு விழாவுக்கான தேதி கேட்டு கடிதம் எழுதி உள்ளோம்.

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு உள்ள இடத்தில் மண் பரிசோதனை முடித்து சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கி உள்ளனர். எந்த மாதிரி கட்டிடம் கட்ட வேண்டும் என்று விரிவான அறிக்கை தயாரித்து ஒப்புதல் பெற்று உள்ளனர். விரைவில் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு கூறி உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆண்டு கரூர், நெல்லை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் எதிர்பார்க்கிறோம். கரூர் மருத்துவ கல்லூரியில் புதிதாக 150 இடங்கள், நெல்லை மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 100 இடங்கள், மதுரை மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 100 இடங்கள் என மொத்தம் 350 இடங்கள் அதிகரிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதுதவிர அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 1,834 டாக்டர்கள் ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படுவார்கள்.

டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா ஆகியவை தமிழகத்தில் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பன்றி காய்ச்சல் பரவியது. அதுவும் முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விட்டது. தொடர்ந்து நோய் பரவாமல் டெங்கு, பன்றி காய்ச்சல், சிக்குன் குனியா பரவாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நெல்லையில் மண்டல புற்றுநோய் மையம் அமைப்பதற்கு 3 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும். பழைய கோபால்ட் தெரபி மற்றும் ஹீமோதெரபி சிகிச்சை இருந்தாலும், லீனாக் தெரபி சிகிச்சை வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இனி இந்த சிகிச்சைக்காக சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை.


நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் கோரிக்கையின்படி விடுதியை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதுவரை தற்காலிகமாக சட்டக்கல்லூரி விடுதியை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கல்லூரிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒரு வழக்கால் நிலுவையில் உள்ளது.

தமிழகம் சுகாதாரத்தில் 2-வது இடத்திலும், சுத்தத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதையடுத்து அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, அரசு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் நெல்லை அருகே கல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கேயே பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 12 குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின்போது நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி டீன் கண்ணன், அரசு சித்தா கல்லூரி முதல்வர் நீலாவதி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் செந்தில்குமார், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், துணை முதல்வர் ரேவதி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தாராம் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

Next Story