ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் வறட்சியால் கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் வறட்சியால் கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகபழனிச்செல்வம் தலைமையில் விவசாயிகள் பலர் அழுகிய மக்காச்சோளப் பயிர்களுடன் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பூவாணி கிராமத்துக்கு உட்பட்ட பூவாணி, மேலபூவாணி, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் மானாவாரி பயிர்களாக பாசிபயறு, உளுந்து, மக்காச்சோளம் போன்றவை சுமார் 2 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் செய்யப்பட்டு இருந்தது. இதில் மக்காச்சோள விதைகள் வெளிநாட்டு விதைகளே கிடைத்தன.
மக்காச்சோளம் விளைந்து பயன்தரும் நிலையில் படைப்புழு தாக்குதலாலும் வறட்சியாலும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் பாசிபயறு, உளுந்து பயிர்கள் ஆகியவை வறட்சியால் கருகியது. எனவே கருகிய பயிர்களுக்கு விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
ஓட்டப்பிடாரம் தாலுகா கொடியங்குளத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் கொடுத்த மனுவில், கொடியங்குளம் ஊராட்சி செயலாளராக இருப்பவர் ஊராட்சி பணிகள் எதையும் செய்யாமல் எந்த நேரமும் மது குடித்து கொண்டு இருக்கிறார். இரவு நேரங்களிலும் அங்கேயே தங்கி மது குடித்து வருகிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், சூரங்குடி பகுதியில் விவசாயிகள் பொதுமக்களின் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி, விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாய நிலத்தில் பயிர்களை அழித்து எரிவாயு குழாய்களை பதித்ததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மாவட்ட செயலாளர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் மகளிர் அணியினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மூலக்கரை ரோடு, காந்தி தெரு, செட்டிமார் தெரு, நான்கு மூலை சந்திப்பு பகுதியில் குடிநீர் பொது குழாய் உள்ளது. இதனை பூவரசூர் பொடிப்பிள்ளை அம்மன் கோவில் முன்பு மாற்றி அமைத்து தர வேண்டும். மேலும் தற்போது குடிநீர் குழாய் இருக்கும் இடத்தில் சுகாதார கேடு ஏற்படும் வகையில் குப்பைகள் போடப்பட்டு வருகிறது. எனவே மக்கள் நலன் கருதி குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story