நெல்லை சந்திப்பில் இருந்து 2-வது நாளாக ரெயிலில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி பெண்கள் உள்பட 3 பேர் கைது
நெல்லை சந்திப்பில் இருந்து நேற்று ரெயிலில் 2-வது நாளாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற சம்பவத்தில் பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் நெல்லையில் இருந்து கேரளா வழியாக பிலாஸ்பூர் செல்லும் ரெயிலில் கடத்த முயற்சி செய்த 1½ டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. பழப்பெட்டிகளில் பழங்களை கொண்டு செல்வது போல் ரேஷன் அரிசியை பதுக்கி கடத்த முயற்சி செய்ததை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்தனர். இது தொடர்பாக 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நெல்லை வழியாக நேற்றும் ரேஷன் அரிசி கடத்தல் முயற்சி நடந்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கேரளாவுக்கு செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்துவதற்காக மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசியை நெல்லை சந்திப்பு பிளாட்பாரத்தில் சிலர் கொண்டு வந்து வைத்திருந்தனர்.
நேற்று காலை இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்த உடன் ரேஷன் அரிசி மூட்டைகளை 3 பேர் ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஞான ஆனந்த் மற்றும் போலீசார் அரிசி மூட்டைகளை ரெயிலில் ஏற்ற விடாமல் தடுத்து சோதனை நடத்தினர். அதில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த முனுசாமி மனைவி பாப்பா (வயது 66), பாண்டி மனைவி லட்சுமி (60) மற்றும் நெல்லை டவுனை சேர்ந்த மணி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story