வேலூரில் கிராமநிர்வாக அலுவலர்கள் மனிதசங்கிலி கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
கிராமநிர்வாக அலுவலர்கள் தொடர் வேலைநிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் மனிதசங்கிலி நடத்தினர்.
வேலூர்,
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், கணினி மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊர்வலம் என பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் மனிதசங்கிலி நடத்தினர்.
இதற்காக கிராமநிர்வாக அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் திரண்டனர். அங்கு அவர்கள் கைகோர்த்து மனிதசங்கிலி நடத்தினர். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் கனகராஜ், ஜோதீஸ்வரன், சக்கரவர்த்தி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனித சங்கிலியில் கலந்துகொண்ட கிராமநிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story