தண்ணீர் வரத்து குறைவு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 9 நாட்களில் 10 அடி குறைந்தது


தண்ணீர் வரத்து குறைவு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 9 நாட்களில் 10 அடி குறைந்தது
x
தினத்தந்தி 25 Dec 2018 3:45 AM IST (Updated: 25 Dec 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் வரத்து குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 9 நாட்களில் 10 அடி குறைந்தது.

மேட்டூர்,


வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்திற்கு கை கொடுக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2 நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கும் கீழ் உள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அணைக்கு வரும் நீர்வரத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.


கடந்த 15-ந்தேதி அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,513 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்வரத்து குறைந்ததன் காரணமாக அணை நீர்மட்டம் மளமளவென குறைந்தது. நேற்று காலை நீர்மட்டம் 90.97 அடியாக இருந்தது. கடந்த 9 நாட்களில் நீர்மட்டம் 10 அடி குறைந்தது. நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Next Story