வாழப்பாடியில், உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக உண்ணாவிரதமிருந்த 5 விவசாயிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
வாழப்பாடியில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 விவசாயிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
வாழப்பாடி,
விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், சாலையோரங்களில் கேபிள் முறையில் மின்சாரத்தை கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் கொட்டகை அமைத்து 8–வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், விவசாயிகள் பொன்னுசாமி (வயது47), ஜெயராமன் (37), மனிஷ்(35), சதீஷ்பாபு(29), கணேசன்(28) உள்பட 10 பேர் நேற்று முன்தினம் முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டும் வினோத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
உண்ணாவிரதமிருந்த விவசாயிகளை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது, பொன்னுசாமி, ஜெயராமன், மனிஷ், சதீஷ்பாபு, கணேசன் ஆகியோரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் வாழப்பாடி போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு 5 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.