புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்? - சிவல்புரி சிங்காரம் பேச்சு
பிறக்கும் 2019 புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு யோக பலன் அமையும் என்று சிவல்புரி சிங்காரம் பேசினார்.
திருப்பத்தூர்,
கீழச்சிவல்பட்டியிலிருந்து 261 மாதங்களாக சிவல்புரி சிங்காரம் தலைமையில் செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள பிரபலமான மலைகளை பவுர்ணமி நாளில் கிரிவலமாக சுற்றி வருகின்றனர். இதில் தமிழகம் மற்றும் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல மார்கழி மாதப் பவுர்ணமியில் கிரிவலம் வந்து வழிபாடு செய்தனர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் குன்றக்குடி, வைரவன்பட்டி, மலையக்கோவில், தபசுமலை ஆகிய இடங்களிலுள்ள மலைகளைச் சுற்றி வந்து, உமா மகேஸ்வரரையும், முருகப்பெருமானையும் பக்திப் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்தனர். விடிய விடிய நடைபெற்ற இந்த கிரிவலத்தில் கவியரசு கண்ணதாசன் ஊரான சிறுகூடல்பட்டியிலுள்ள கவியரசர் சிலைக்கு மாலையணிவித்தும், 400 ஆண்டுகளுக்கு முன் பாடல் பாடி மழையை வரவழைத்த அருட்கவி பாடுவார் முத்தப்பரை வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் செட்டிநாடு கிரிவலக்குழுத் தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் ஆன்மிக விழா நடைபெற்றது. முன்னதாக அவரது ஆன்மிக சேவையைப் பாராட்டி அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் உமாதேவன், குறிஞ்சிப்பாடி தேவன், சிங்கம்புணரி மதன், துபாய் கென்னடி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினர். பக்திப் பாடல்களை ஆத்தங்குடி முருகப்பன், அலமுஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடி வந்தனர். பின்பு சிவல்புரி சிங்காரம் பேசியதாவது:-
2019 புத்தாண்டு சுவாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது. அதன் கூட்டுத் தொகை 3. இந்த எண்ணிற்குரிய குரு ஆதிக்கத்தில் வருவதால் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும், குருவிற்குரிய நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், குரு தற்சமயம் சஞ்சரிக்கும் விருச்சிக ராசிக்கும், குருவின் பார்வை பதியும் ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கும் பொருளாதார உயர்வு, செல்வாக்கு அதிகரிப்பு, நினைத்த காரியங்கள் நிறைவேறும் யோகமும் உண்டு. மற்ற ராசிக்காரர்கள் தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் அவர்கள் வாழ்விலும் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கூடும்.
புத்தாண்டு அன்று தெய்வப் படங்களின் முகத்தில் முதன் முதலில் விழிப்பது நல்லது. கனிகள், வலம்புரிச்சங்கு போன்றவற்றின் முகத்தில் விழித்தாலும் கனிவான வாழ்க்கை அமையும். புத்தாண்டின் தொடக்க நாளில் எதிர்மறைச் சொற்களைத் தவிர்ப்பது நல்லது. அன்று கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம். மற்ற நன்மையான செயல்களைச் செய்வதோடு அருகில் இருக்கும் சிவன், விஷ்ணு ஆலயங்கள், குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தால் இந்த ஆண்டு மட்டுமல்ல, எந்த ஆண்டும் இனிய ஆண்டாக அமையும். விழாவில் தேவகோட்டை மாணிக்கம், தனலட்சுமி, அருணாசலம், காரைக்குடி செல்வகுமார், மேலூர் சோலையப்பன், பாபு, சிங்கம்புணரி லட்சுமணன், சீதா, வள்ளியம்மை, சீதாலட்சுமி, மதுரை குமாரசாமி, சண்முகம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story