மளிகை கடைகளில் திருடிய வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை சங்ககிரி கோர்ட்டு தீர்ப்பு
மளிகை கடைகளில் திருடிய வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சங்ககிரி,
சங்ககிரி தாலுகா மகுடஞ்சாவடி அருகே சண்முகபுரம் பகுதியில் முஸ்தபா என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியில் ஜெயபால் என்பவருடைய மளிகை கடையும் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி இரவு இந்த மளிகை கடைகளை பூட்டிவீட்டு 2 பேரும் வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது மளிகை கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. முஸ்தபா கடை உள்ளே சென்று பணம் வைத்த பெட்டியை பார்த்தபோது ரூ.29ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
அதேபோல் அன்று இரவு ஜெயபால் மளிகை கடையிலும் பூட்டு உடைக்கபட்டு ரூ.2,500 மற்றும் ரூ.24ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை திருட்டு போனது தெரிய வந்தது. இருவரும் மகுடஞ்சாவடி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர்.
இதன்பேரில் மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு தொடர்பாக ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சித்தேஸ்வரன் (வயது 29), ரகுபதி (33), பூபதி (29), மாரியப்பன் (27), மணிகண்டன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து சங்ககிரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2 ல் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை நீதிபதி எம்.ஜெயமணி விசாரித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் குற்றத்தை ஒப்பு கொண்ட சித்தேஸ்வரனுக்கு 457-வது பிரிவின்படி 2 ஆண்டு சிறைத்தண்டனையும், 380-வது பிரிவின்படி 2 ஆண்டு சிறைத்தண்டனையும் ஏக காலத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு கடையில் திருடிய வழக்கில் 457-வது பிரிவின்படி 2 ஆண்டு சிறைத்தண்டனையும் 380-வது பிரிவின்படி 2 ஆண்டு சிறைத்தண்டனையும் ஏககாலத்தில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2 வழக்குகளில் சித்தேஸ்வரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
மற்ற 4 பேர் மீதான தனி வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story