புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருப்பூண்டியில், அரசியல் கட்சியினர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருப்பூண்டியில், அரசியல் கட்சியினர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2018 4:00 AM IST (Updated: 25 Dec 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருப்பூண்டியில் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேளாங்கண்ணி,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் திருப்பூண்டியில் கிழக்கு கடற்கரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தி.மு.க. சேர்ந்த ராமலிங்கம், முகமது ரபீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அப்துல் அஜீஸ், உமாநாத், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த இப்ராஹீம் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் இதுநாள் அரசால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் வழங்கவில்லை. உடனடியாக நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். கூரை வீடு, காலனி வீடு, ஓட்டு வீடு, மாடி வீடு என விடுபட்ட அனைத்து வீடுகளுக்கும், இறந்த கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மத்திய அரசே தமிழக அரசு கோரியுள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நாகை மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் தனி தாசில்தார் அமுதவிஜயரங்கன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது 3 நாட்களுக்குள் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூண்டி-நாகை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story