ஏ.டி.எம். பணம் மாயமானதாக கூறி கொள்ளை தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது


ஏ.டி.எம். பணம் மாயமானதாக கூறி கொள்ளை தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2018 3:45 AM IST (Updated: 25 Dec 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே சாயல்குடியில் ஏ.டி.எம். பணம் மாயமானதாக கூறி கொள்ளையடித்து நாடகமாடிய சம்பவத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்ப சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள், ஏ.டி.எம்.மில் பணம் வைக்க சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது என்றும், அந்த சமயத்தில் லாக்கரில் இருந்த பணம் மாயமானதாகவும் கூறினர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் நிறுவன ஊழியர்களே பணத்தை கொள்ளையடித்துவிட்டு, மாயமானதாக நாடகமாடியது அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் முடிவில் சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நிறுவன ஊழியர்களான பண பொறுப்பாளர்கள் அன்பு, குருபாண்டி, டிரைவர் கபிலன், பாதுகாவலர் வீரபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கடந்த 20-ந்தேதி ராமநாதபுரத்தில் இருந்து 2 வங்கிகளில் பெற்றுச்சென்ற ரூ.2 கோடியே 11 லட்சம் பணத்தில் முதல் கட்டமாக ரூ.26 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்துவிட்டதாக வங்கிக்கும், நிறுவனத்திற்கும் ஊழியர்கள் தகவல் அனுப்பி உள்ளனர். இதன் பின்னர் தான் இரவில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணத்தினை மாயமானதாக நாடகமாடி உள்ளனர். போலீசாரின் விசாரணையில் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்த நிலையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நாடகமாடுவதற்கு முன்னரே இவர்கள் பல ஏ.டி.எம். எந்திரங்களில் யாருக்கும் தெரியாமல் ரூ.1 கோடியே 42 லட்சம் வைத்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக இந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஆடம்பரமாக செலவு செய்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கூட்டு கொள்ளையில் முக்கிய நபராக கருதப்படும் பரமக்குடி முதலூர் முனியசாமி மகன் கந்தபாண்டி(28) என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.16 ஆயிரத்தை கொள்ளையடித்தது தெரியவந்ததால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன்பின்னர் வெளியில் இருந்து தனது கூட்டாளியான அன்பு மூலம் கொள்ளை செயலை தடையின்றி திட்டமிட்டு தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளார். இந்த பணத்தினை அன்புவும், கந்தபாண்டியும் பங்கு பிரித்து கொண்டு புதிதாக சேர்ந்த குருபாண்டிக்கு அவ்வப்போது பணமும், மதுவும் வாங்கி கொடுத்ததோடு, பாதுகாவலருக்கு சிறிதளவு பணமும் கொடுத்து சரிகட்டி வந்துள்ளனர்.

ஏற்கனவே கொள்ளையடித்த பணம் குறித்து அறிவதற்காக ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதி ஏ.டி.எம்.களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவு காட்சிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த காட்சிகளின் அடிப்படையில் எந்த ஏ.டி.எம்.மில் அதிக பணம் வழக்கத்திற்கு மாறாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது?, எதில் பணம் வைக்காமலே வந்துள்ளனர்? என்ற விவரங்களை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுதவிர கடந்த ஒரு மாதத்தில் ஏ.டி.எம்.களில் வைக்கப்பட்ட பணம், இதற்காக வங்கிகளில் பெற்றுச் செல்லப்பட்ட பணம் ஆகியவற்றின் விவரங்களை அளிக்குமாறு மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட கந்தபாண்டி மற்றும் பணம் வாங்கி வைத்திருந்த ராமநாதபுரம் நேருநகர் முத்துமுருகேசன் மகன் யோகேஷ் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story