பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்: முகநூலில் அனுப்பிய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய 2 பேர் கைது


பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்: முகநூலில் அனுப்பிய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2018 10:00 PM GMT (Updated: 25 Dec 2018 12:26 AM GMT)

பெண் தற்கொலையில் திடீர் திருப்பமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த பெண் முகநூலில் அனுப்பிய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இடிகரை, 

கோவையை சேர்ந்த 28 வயதான பெண்ணுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. அவருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. அந்த குழந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறது.

இந்த நிலையில் அந்த பெண் கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அந்த பெண்ணுக்கும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் கடலூரை சேர்ந்த முகமது ரபீக் (வயது 28) என்பவருக்கும் முகநூலில் நட்பு ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் முகமது ரபீக்கிற்கு தனது புகைப்படங்களை அனுப்பி வைத்ததால், அந்த புகைப்படங்களை அவர் மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களாக மாற்றி இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதற்கு குன்னூரை சேர்ந்த ஆதித்யா (23) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால்தான் அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார். எனவே அந்த பெண் தற்கொலையில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து போலீசார் முகமது ரபீக், ஆதித்யா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

28 வயதான பெண்ணுக்கும் முகமது ரபீக்கும் முகநூலில் அடிக்கடி பேசிக்கொண்டனர். இதனால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகினார்கள். அப்போது அவர் கேட்டதன் பேரில் அந்த பெண் தன்னிடம் இருந்த புகைப்படங்களை முகமது ரபீக்கிற்கு அனுப்பி இருக்கிறார்.

அந்த பெண் பார்க்க மிகவும் அழகாக இருந்ததால், அவரை உல்லாசம் அனுபவிக்க முடிவு செய்த முகமது ரபீக், அந்த புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி உள்ளார். பின்னர் அந்த படத்தை அந்த பெண்ணுக்கே அனுப்பி வைத்து, நான் கோவை வரும்போது எனது ஆசைக்கு இணங்க வில்லை என்றால் இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி உள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த பெண், தனது நண்பர் ஆதித்யாவிடம் தெரிவித்தார். உடனே அவர் முகமது ரபீக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மிரட்டியதுடன், மார்பிங் செய்யப்பட்ட புகைப் படங்களை அவரிடம் இருந்து வாங்கினார். பின்னர் அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு, தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் கணவரிடம் காண்பித்து விடுவதாக ஆதித்யாவும் அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.

இதற்கிடையே கடந்த 8-ந் தேதி கோவை வந்த முகமது ரபீக், அந்த பெண்ணை சந்தித்து தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், மார்பிங் செய்த புகைப்படங்களை அவருடைய கணவருக்கு அனுப்பி வைத்துவிடுவதாக மிரட்டினார். இதனால்தான் அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

எனவே முகநூலில் யாராவது புகைப்படங்களை கேட்டால் பெண்கள் அனுப்பி வைக்கக் கூடாது. தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் சாதாரண புகைப்படங்களைக்கூட எளிதாக மார்பிங் செய்து ஆபாசமாக மாற்ற முடியும்.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் அதிக நேரம் செல்போனில்தான் செலவிடுகிறார்கள். எனவே முகநூலில் நேரத்தை செலவிடும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் யாரும் வெளியே சொல்வது இல்லை. அதை சாதகமாக பயன்படுத்தும் நபர்கள் தாராளமாக இதுபோன்று செய்து வருகிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் தாராளமாக போலீசில் புகார் செய்யலாம். அந்த பெண்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story