திருப்பூரில் பட்டப்பகலில் பயங்கர சம்பவம்: கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை - ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த ஆசாமி வெறிச்செயல்


திருப்பூரில் பட்டப்பகலில் பயங்கர சம்பவம்: கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை - ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த ஆசாமி வெறிச்செயல்
x
தினத்தந்தி 25 Dec 2018 5:30 AM IST (Updated: 25 Dec 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நடுரோட்டில் பட்டப்பகலில் கிளிஜோதிடரை ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், 

திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார்(வயது 40). இவர் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்கா முன்பு அமர்ந்து கிளியை வைத்து ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல அங்கு வந்து ஜோதிடம் பார்க்கும் பணியில் ரமேஷ் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

பகல் 12.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி ஆசாமி ஒருவர் அங்கு வந்தார். அவர் ஜோதிடரின் அருகே வந்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. இதனால் ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு எதிரே பென்னிகாம்பவுண்ட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பாடு வாங்குவதற்காக சென்றார். இருப்பினும் அவரின் பின்னால் ‘ஹெல்மெட்’ அணிந்தபடியே அந்த ஆசாமி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு ரமேஷ் வந்ததும், அந்த ஆசாமி திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிடர் ‘என்னை காப்பாற்றுங்கள்....காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டபடி ஓடினார். இருப்பினும் விடாமல் துரத்திய அந்த ஆசாமி ஜோதிடரின் பின்கழுத்தில் பலமாக வெட்டினார். இதில் வெட்டுக்காயம் அடைந்த ஜோதிடர் அப்படியே ரோட்டில் மயங்கி விழுந்தார்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த ஆசாமி கீழே விழுந்து கிடந்த ஜோதிடரின் கழுத்தில், இருகைகளால் அரிவாளை பிடித்தபடி சரமாரியாக வெட்டினார். இதை பார்த்துக்கொண்டிருந்த சில பெண்கள் அதிர்ச்சியில் கத்தினார்கள். ஆனாலும் விடாமல் தொடர்ந்து அந்த ஆசாமி ஜோதிடரை பலமுறை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து அந்த ஆசாமி தனது பையில் இருந்து துண்டு பிரசுரங்கள் சிலவற்றை எடுத்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலரிடம் கொடுத்தார். மீதமுள்ள நோட்டீசை அங்கேயே வீசிவிட்டு சர்வ சாதாரணமாக அங்கு நிறுத்திவைத்திருந்த தனது மோட்டார்சைக்கிளில் அமர்ந்தார். பின்னர், ‘நான் நேரடியாக சென்று கோர்ட்டில் சரணடைய போகிறேன்’ என்று கத்தியபடி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். திடீரென நடந்து முடிந்த இந்த பயங்கர சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வணிகவளாகம் நிறைந்த பகுதி என்பதால், அந்த பகுதியில் பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளின் கதவுகளை உடனடியாக மூடினார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பிணமாக கிடந்த ரமேசின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

கொலையாளி வீசிச்சென்ற துண்டுபிரசுரங்களை சேகரித்து அதில் உள்ள விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தால் இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த பகுதியில் உள்ள வணிகவளாகங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளி ‘ஹெல்மெட்’ அணிந்தபடி கொலை சம்பவத்தில் ஈடுபட்டதால் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் யாருக்கும், கொலையாளி குறித்த அடையாளம் எதுவும் தெரியவில்லை. இதனால், கொலை செய்யப்பட்ட ரமேசின் சொந்த ஊருக்குட்பட்ட போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு அங்கும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் கிளிஜோதிடரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட கிளி ஜோதிடர் ரமேசுக்கு திருமணமாகி, மகாலட்சுமி (32) என்ற மனைவியும், தாரணி (11) என்ற மகளும், காளஸ்வரன் (9) என்ற மகனும் உள்ளனர்.

Next Story