தண்ணீர்பந்தல் காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


தண்ணீர்பந்தல் காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 24 Dec 2018 10:15 PM GMT (Updated: 24 Dec 2018 11:41 PM GMT)

தண்ணீர்பந்தல் காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டு தண்ணீர்பந்தல் காலனியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்பினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தண்ணீர்பந்தல் காலனி பிரதான சாலையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த சாலை மிகவும் நெருக்கடியான போக்கு வரத்து நிறைந்த சாலையாகும். மேலும், இந்த பகுதியில் ஏராளமான ஆலயங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும். இது தொடர்பாக 2 முறை மனு கொடுத்துள்ளோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகிறது. எனவே எங்களின் எதிர்ப்பை மீறி எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. இதுபோல் தண்ணீர்பந்தல் காலனி முதல் பங்களா பஸ் நிறுத்தம் வரை அவினாசி ரோட்டில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாயில் வழியெங்கும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாவதோடு நெடுஞ்சாலையும் சேதமடைகிறது. எனவே இந்த கசிவுகளை சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் “திருப்பூர் 12-வது வார்டுக்கு உட்பட்ட குலாம்காதர் லே அவுட், வி.பி.சித்தன் நகர், சாரதா நகர், பாலமுருகன் நகர் பகுதிகளில் சாக்கடை முறையாக தூர்வாருதல், குடிநீர் வினியோகம் சரியாக இல்லை. குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாமல் உள்ளது. எனவே அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேஷன் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் “திருப்பூர் உள்ளூர் திட்ட குழுமத்தில் கட்டிட கட்ட அனுமதிக்கக்கோரி விண்ணப்பிக்கிறவர்களுக்கு, கட்டிட அனுமதி கிடைக்காமல் மிகவும் காலதாமதம் ஆகிறது. இதனால் பல்வேறு கட்டிட பணிகள் ஆரம்பிக்காமல் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், என்ஜினீயர்கள், தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. உள்ளூர் திட்ட குழுமத்தில் கட்டிட அனுமதிகோரி வரும் விண்ணப்பங்களுக்கு காலதாமதமின்றி அனுமதி வழங்க தகுந்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றிருந்தனர்.

விஜயாபுரத்தை சேர்ந்த காஜாமொய்தீன் கொடுத்த மனுவில் “ இணையதளத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்தபோது அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டேன். அப்போது அதில் பல்பு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் அதில் இருந்து பல்பு தயார் செய்து அனுப்பினால், அதற்கான ஊதியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் ரூ.5 ஆயிரம் அனுப்பினேன். அதற்கான மூலப்பொருட்கள் வந்தது. தொடர்ந்து ரூ.55 ஆயிரம் அனுப்பினேன். ஆனால் அதற்கான மூலப்பொருட்கள் வரவில்லை. எனவே எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும். மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றிருந்தார்.

நல்லூர் காசிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “எங்கள் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு குடிசை மாற்று வாரியத்தால் 3 தவணையாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் கேட்கிறார்கள். இவ்வளவு பணம் கொடுக்க எங்களிடம் வசதி இல்லை. எனவே இந்த பணத்தை குறைத்து கொடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

வீரபாண்டி ராமபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “எங்கள் பகுதிகளான ராமபுரம் மற்றும் ஜே.ஜே.நகர் பகுதிகளில் இன்னமும் சாக்கடை வசதி செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதனால் சாக்கடை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்துதர வேண்டும்” என்றிருந்தனர். 

Next Story