தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 26 Dec 2018 3:30 AM IST (Updated: 25 Dec 2018 5:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கேரல் பவனி

ஏசு கிறிஸ்து பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி நகரில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள், இளைஞர்கள், ஆலயங்கள் சார்பில் நேற்று முன்தினம் இரவு ‘கேரல் பவனி’ நடத்தப்பட்டது. லயம் சந்திப்பு பகுதியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கேக் வெட்டி தொடங்கி வைத்தார். பவனியில் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பவனி முக்கிய ரோடுகளின் வழியாக வலம் வந்தது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இளைஞர்கள், சிறுவர்கள் நடனம் ஆடியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

சிறப்பு பிரார்த்தனை

நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி சின்னக்கோவிலில் தூத்துக்குடி மறைமாவட்ட பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுத்திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அங்கு ஏசுபாலன் பிறந்ததை குறிக்கும் வகையில் கிறிஸ்து பிறப்பு குடில் திறக்கப்பட்டது. அப்போது மக்களும் வாழ்த்துப் பாடல்களை பாடினர்.

இதேபோன்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை லெரின் டிரோஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இரவில் மக்கள் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


Next Story