மாற்றுத்திறனாளி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு


மாற்றுத்திறனாளி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 3:00 AM IST (Updated: 25 Dec 2018 7:06 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் சமத்துவபுரம் பி.சி.காலனி பின்புறம் காட்டு பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு 39 வயது மதிக்கத்தக்க இடது கை இல்லாத மாற்றுத்திறனாளி ஆண் ஒருவர் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரலிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகா தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் பொன்னுச்சாமி (வயது 39) என்பது தெரிய வந்தது. அவர் மீது விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 18 திருட்டு வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்தது.

தனிப்படை

பொன்னுச்சாமி தன்னுடைய கூட்டாளிகளுடன் திருடச் செல்லும்போது, திருட்டு பொருட்களை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க சங்கரலிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story