கோவை அருகே செங்கல் சூளையில் 200 அடி ஆழ கிணற்றுக்குள் லாரி கவிழ்ந்து 2 தொழிலாளர்கள் பலி - டிரைவர் உயிருடன் மீட்பு
கோவை அருகே செங்கல் சூளையில் இருந்த 200 அடி ஆழ கிணற்றுக்குள் லாரி கவிழ்ந்தது. இதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
துடியலூர்,
கோவை சின்னத்தடாகத்தை அடுத்த வீரபாண்டி பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இதில் ஒரு சூளையில், செங்கல் லோடு ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் டிப்பர் லாரியில் டிரைவர் மற்றும் 2 தொழிலாளர்கள் வந்தனர். லாரியை செங்கல் ஏற்றுவதற்காக ஓரமாக டிரைவர் நிறுத்த முயற்சித்து உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த கிணற்றுக்குள் லாரி கவிழ்ந்தது.
லாரியுடன் 3 பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர். சத்தம் கேட்டு சூளை தொழிலாளர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது லாரி கிணற்றுக்குள் கவிழ்ந்தது தெரிய வந்தது. அவர்கள் தடாகம் போலீசாருக்கும், கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். சுமார் 200 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சிறிதளவு மட்டும் தண்ணீர் உள்ளது. லாரி கிணற்றில் விழுந்த போது, பாதியில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது.
லாரியில் இருந்த 3 பேரையும் மீட்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். நள்ளிரவிலும் மீட்புப் பணி நடந்தது. இதன் பயனாக நேற்று அதிகாலை 3 மணிக்கு லாரி டிரைவரான தேனியை சேர்ந்த மணி (வயது 20) என்பவரை உயிருடன் மீட்டனர். கயிறு மூலம் அவர் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரி கிணற்றில் விழுந்தபோது அதில் இருந்த தேனியை சேர்ந்த பாலமுருகன் (27), செல்வம் (31) ஆகிய 2 தொழிலாளர்களும் லாரியில் இருந்து தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்துள்ளனர். லாரியை மீட்க முடியாததால் இறந்த தொழிலாளர்களின் உடல்களை இன்னும் மீட்க முடியவில்லை.
லாரியை கிணற்றில் இருந்து மேலே எடுத்தால்தான் இறந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்க முடியும் என்பதால் கிரேன் மூலம் லாரியை தூக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லாரி கிணற்றில் கவிழ்ந்து தொழிலாளர்கள் 2 பேர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story