உத்தமபாளையம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி


உத்தமபாளையம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 Dec 2018 3:30 AM IST (Updated: 25 Dec 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

உத்தமபாளையம், 

உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி. அவருடைய மகன் பாண்டி (வயது 19). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருடைய மகன் பிரவீன்குமார் (10). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மதியம் இவர்கள் 2 பேரும், உத்தமபாளையம்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஆந்திரா நோக்கி வந்த கார் ஒன்று, சாலையில் நடந்து சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் பாண்டியும், பிரவீன்குமாரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டி, முனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சுனில் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கி இறந்த பள்ளி மாணவன் உள்பட 2 பேரும் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் கோவிந்தன்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story