நீண்ட நேரம் பஸ் வராததால் பயணிகள் அவதி: ஊட்டி போக்குவரத்து அலுவலகம் முற்றுகை


நீண்ட நேரம் பஸ் வராததால் பயணிகள் அவதி: ஊட்டி போக்குவரத்து அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 26 Dec 2018 3:15 AM IST (Updated: 25 Dec 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட நேரம் பஸ் வராததால் அவதி அடைந்த பயணிகள், ஊட்டி போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஊட்டி,

தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து, மாணவ- மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதுதவிர கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டமும் தொடங்கியது. இதனால் விடுமுறை காலத்தை கழிக்க பொதுமக்கள் குடும்பத்துடன் பல்வேறு வெளியூர்களுக்கு சென்று, வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலாத்தலம் என்பதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், முதுமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதுதவிர பிழைப்புக்காக வெளியூர்களுக்கு சென்று இருந்த நீலகிரி பகுதி மக்களும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். ஆனால் அதற்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படவில்லை.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக ஊட்டிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் ஊட்டியில் இருந்து சாண்டிநல்லா, பைக்காரா, டி.ஆர்.பஜார், நடுவட்டம் வழியாக கூடலூருக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால், ஊட்டி பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் நேற்று முன்தினம் இரவு வெகு நேரம் காத்து கிடந்தனர். இதனால் கொட்டும் பனியில் கைக்குழந்தைகளுடன் பயணிகள் அவதிப்பட்டனர். நீண்ட நேரம் பஸ் வராததால், பொறுமை இழந்த பயணிகள் ஊட்டி அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அலுவலகத்தில் அதிகாரிகள் பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர். அங்கிருந்து சில ஊழியர்கள் தங்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். இருப்பினும் பயணிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் கோவை, ஈரோட்டில் இருந்து கூடலூர் செல்ல ஊட்டி பஸ் நிலையத்துக்கு ஒரு பஸ் வந்தது. இதை கண்ட கூடலூர் பகுதி பயணிகள் போக்குவரத்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதை நிறுத்தி விட்டு பஸ்சில் இடம் பிடிக்க ஓடினர்.

இதனால் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் பஸ்சில் முண்டியடித்து ஏற முடியாமல் பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் கடும் அவதிக்கு ஆளாகினர். இதை கண்ட பஸ் டிரைவர், நடத்துனர் பஸ்சை ஊட்டி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். கூட்டம் அதிகமாக உள்ளதால் கூடலூருக்கு மற்றொரு பஸ் வந்த பின்னரே இயக்க முடிவு செய்தனர். இதனால் முண்டியடித்து ஏறி பயணிகள் நின்றவாறு இருந்தனர். இந்த சமயத்தில் கூடலூருக்கு மற்றொரு பஸ் வந்தது. அந்த பஸ்சிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பெண்கள் அமரும் இருக்கைகளை ஆண்கள் இடம் பிடித்து அமர்ந்து இருந்தனர். இதனால் பெண்கள் குழந்தைகளுடன் பஸ்சில் நின்றவாறு பயணம் செய்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

ஊட்டியில் 2 மணி நேரம் காத்து கிடந்தும் கூடலூர் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த சமயத்தில் போக்குவரத்து அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்கலாம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே இனி வரும் சீசன் மற்றும் பண்டிகை காலங்களில் அதிகாரிகள் பஸ் நிலையங்களில் ஆய்வு நடத்தி பொதுமக்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story