கோவையில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட அ.ம.மு.க. பிரமுகரின் உடல் 85 நாட்களுக்கு பிறகு மீட்பு - எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது


கோவையில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட அ.ம.மு.க. பிரமுகரின் உடல் 85 நாட்களுக்கு பிறகு மீட்பு - எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது
x
தினத்தந்தி 26 Dec 2018 4:45 AM IST (Updated: 25 Dec 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட அ.ம.மு.க. பிரமுகரின் உடல் 85 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. இதில் எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது.

துடியலூர்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் ஜெயவேணு (வயது36). கோழிக்கடை உரிமையாளர். இவர் ஏரல் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருந்தார். இவருக்கு பாலதீபா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஜெயவேணு, கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் சாட்சி சொல்ல கோவை வந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இது தொடர்பாக அவருடைய மனைவி பாலதீபா துடியலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பரில் போலீசார் காணவில்லை என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கோவை துடியலூரில் உள்ள உறவினர் ராஜேஷ் அழைத்ததன் பேரில்தான் கோர்ட்டில் சாட்சி சொல்ல தனனுடைய கணவர் ஜெயவேணு சென்றதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவருடைய மனைவி பாலதீபா போலீசில் தெரிவித்து இருந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்றது.

இதில் ஜெயவேணுவுடன், அவருடைய சித்தி மகன் துடியலூர் வடமதுரையை சேர்ந்த ராஜேஷ் (வயது35), மற்றும் வரப்பாளையத்தை சேர்ந்த நண்பர் சுரேஷ் (33) ஆகியோர் வரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெயவேணுவை இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்து, உடலை ராஜேசும், சுரேசும் சேர்ந்து வரப்பாளையம் பகுதியில் உள்ள 150 அடி ஆழ கிணற்றில் வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது.

இதனால் போலீசார் தன்னை பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் கொலை நடந்த சில நாட்களில் சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தலைமறைவாக இருந்த ராஜேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அளித்த தகவலின்படி, வரப்பாளையம் பகுதியில் ஜெயவேணுவின் உடல் வீசப்பட்ட கிணற்றை தோண்டி கடந்த 32 நாட்களாக உடலை தேடி வந்தனர். கிணற்றுக்குள் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்ததால் இரவு, பகலாக குப்பைகளை அகற்றி உடலை தேடும் பணி துடியலூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், போலீஸ் ஏட்டுகள் தினேஷ், லூர்துராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது. 200 லோடு குப்பைகளை அகற்றி உடலை தேடுவதற்காக மட்டும் ரூ.12 லட்சம் செலவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கிணற்றுக்குள் 140 அடி ஆழத்தில் குப்பைகளுக்கு இடையில் ஜெயவேணுவின் உடல் எலும்புக்கூடாக நேற்று காலை கிடந்தது. இதை அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி, கோவை வடக்கு தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஜெய்சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே எலும்புக்கூடு பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து விசாரணை அதிகாரியும், இன்ஸ்பெக்டருமான ரமேஷ் கண்ணன் கூறுகையில், ஜெயவேணு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசி 85 நாட்களுக்கு பிறகு எலும்புக்கூடாக உடல் மீட்கப்பட்டுள்ளது. போலீசார் இரவு, பகலாக கடந்த 32 நாட்களாக தேடி வந்தோம். உடல் பாகங்கள் கிடைத்து இருப்பதால் கொலை குற்றவாளிக்கு கோர்ட்டு மூலம் கடும் தண்டனை வாங்கி கொடுப்போம் என்றார்.

அ.ம.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டு எலும்புக்கூடாக உடல் மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story