பி.அக்ரகாரத்தில் முனியப்பசாமி கோவில் திருவிழா - ஆடு,கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


பி.அக்ரகாரத்தில் முனியப்பசாமி கோவில் திருவிழா - ஆடு,கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 26 Dec 2018 5:00 AM IST (Updated: 26 Dec 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பி.அக்ரகாரத்தில் முனியப்பசாமி கோவில் திருவிழாவில், ஆடு,கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பென்னாகரம்,

பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரகாரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரகாரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இந்த திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட் படுத்தாமல் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து சாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். விழாக்குழு சார்பிலும் ஆடு, கோழி பலியிட்டு முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முனியப்பசாமிக்கு மார்கழி மாதம் 1-ந்தேதியில் இருந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று இருமுடி கட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரு விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முனியப்பசாமி கோவில் திருவிழாவையொட்டி தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பி.அக்ரகாரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story