‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் - பேராவூரணியில் நடந்தது
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி பேராவூரணியில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராவூரணி,
‘கஜா’ புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த ஆவணம் பெரியநாயகிபுரம் வருவாய் கிராம உதவியாளர் குமார், மன உளைச்சலால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க வட்ட தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பரஞ்சோதி வரவேற்றார். மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் கஜேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில துணைத்தலைவர் வின்சென்ட், வட்ட பொருளாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புயல் நிவாரணம் வழங்க செல்லுமிடங்களில், பொதுமக்களுக்கும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுவதை தடுக்க அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
புயல் நிவாரண பணியில் ஈடுபடும் கிராம உதவியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story