புயல் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு


புயல் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு
x
தினத்தந்தி 25 Dec 2018 10:00 PM GMT (Updated: 25 Dec 2018 9:10 PM GMT)

புயல் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை கணக்கெடுக்கும் பணியினை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சி, சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியம், வெண்கரை ஊராட்சி, பெரியக்கோட்டை ஊராட்சி ஆகிய பகுதிகளில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை கணக்கிடும் பணியை அவர் பார்வையிட்டார். பின்னர் சேதுபாவாசத்திரத்தில் கஜா புயலால் சேதமடைந்த படகுகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் துறையூர் ஆதிதிராவிடர் காலனியில் அரசால் வழங்கப்பட்ட கஜா புயல் நிவாரணம் பெறப்பட்டுள்ளதா? என்பதையும், சேதமடைந்த வீடுகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளதா? என்பதையும் கேட்டறிந்தார். நிவாரண தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு கூடிய விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.

பின்னர் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தாசில்தார் அலுவலகங்களில் கஜா புயலால் பாதிப்படைந்த குடியிருப்புகள், கால்நடைகள், தென்னை, பயிர் ஆகிய பாதிப்புகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து கேட்டறிந்தார். நிவாரண பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நெடுஞ்செழியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முருகானந்தம், தனித்துணை ஆட்சியர் மணிவண்ணன், தாசில்தார்கள் பாஸ்கரன் (பேராவூரணி), சாந்தகுமார் (பட்டுக்கோட்டை) ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story