சேலம் அருகே அரசு பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி பரிதாப சாவு


சேலம் அருகே அரசு பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி பரிதாப சாவு
x
தினத்தந்தி 26 Dec 2018 4:15 AM IST (Updated: 26 Dec 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே அரசு பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சேலம்,

சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி ரத்தினவேல்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களுடைய மகள் ரவீணாஸ்ரீ (வயது 17). இவர் சேலம் அருகே வேம்படிதாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவி கடந்த மாதம் 27-ந்தேதி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் தோழிகளுடன் வகுப்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தோழிகள் அனைவரும் பள்ளி மைதானத்திற்கு சென்றனர். அப்போது அவரின் தோழிகள் ரவீணாஸ்ரீயை தங்களுடன் வரும்படி அழைத்தனர். அதற்கு அவர் பிறகு வருகிறேன் என்று அவர்களிடம் கூறி விட்டு வகுப்பறையிலேயே இருந்து கொண்டார்.

வகுப்பறையில் தனியாக இருந்த ரவீணாஸ்ரீ திடீரென பிளேடால் தனது இடது கையை அறுத்துக்கொண்டார். இதனால் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த வலியையும் பொருட்படுத்தாமல் அவர் வகுப்பறையில் இருந்து மாடிக்கு ஓடி சென்றார். பின்னர் பள்ளியின் 3-வது மொட்டை மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்வதற்காக ரவீணாஸ்ரீ கீழே குதித்தார்.

இதில் அவரது 2 கால்களும் முறிந்து போனது. மேலும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ரவீணாஸ்ரீயை ஆசிரியர்கள், மாணவிகள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ரவீணாஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த ரவீணாஸ்ரீயின் தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து வந்து மாணவி ரவீணாஸ்ரீயின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், வயிற்றுவலி காரணமாக ரவீணாஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story