சாதிய வன்கொடுமைகள் குறையவில்லை - ஓமலூரில் தொல்.திருமாவளவன் பேச்சு


சாதிய வன்கொடுமைகள் குறையவில்லை - ஓமலூரில் தொல்.திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 26 Dec 2018 4:45 AM IST (Updated: 26 Dec 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

சாதிய வன்கொடுமைகள் குறையவில்லை என ஓமலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

ஓமலூர்,

ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெண்மணி வன்கொடுமை 50-ம் ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தொழிலுடன் இணைந்துள்ளது என்பதை காரல் மார்க்ஸ் அப்போதே கூறியுள்ளார். இந்தியாவில் சாதியும், தொழிலும், மதமும் பின்னி பிணைந்துள்ளன. அவற்றை பிரித்து பார்க்க முடியாது, பிரிக்கவும் முடியாது. அப்படிப்பட்ட காலத்தில் அடிமை மக்களுக்கு துணையாக வந்தவர்கள் கம்யூனிஸ்டு கட்சி. அவர்கள்தான் அடிமை மக்களுக்கு குரல் கொடுத்தனர். இதை நன்றி உனர்வோடு சொல்ல கடமை பட்டுள்ளோம். டெல்டா பகுதிகளில் நிலமுள்ள முதலாளிகள் வீடுகளில் விவசாய தொழிலாளர்கள் அடிமையாகவே வாழ்ந்துள்ளனர்.

முதலாளிகள் வீடுகளில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து வந்துள்ளனர். அப்போதைய காலத்தில் மிக மோசமான கொடுமைகள் நடந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. மாதிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடத்துவது காவல்துறைக்கு பிடிக்கவில்லை. அதை தடுக்க காவல்துறை முயற்சிகள் செய்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெண்மணியில் 40 பேர் தீ வைத்து கொளுத்தி கொல்லப்பட்டனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் செயல்படுகிறது. 50 ஆண்டுகளில் இருந்து இன்று வரை சாதிய வன்கொடுமைகள் குறையவில்லை. தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. வெண்மணி படுகொலைகளுக்கு பிறகும் சாதிய கொடுமைகள், ஆணவ கொலைகள், காவல்துறை கொடுமைகள் நடந்துகொண்டு தான் வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில், சேலம் வைஷ்ணவி பில்டர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் வசந்த், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் பாவேந்தன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் தமிழ் அமுதன், சாமுராய் குரு, அர்ஜூனன், தாமரை செல்வன், தங்க தமிழ்செல்வன், பாவரசு, மெய்யழகன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story