குற்றச்செயல்களை தடுக்க 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு - கடலூரில் ஐ.ஜி.நாகராஜன் பேட்டி
கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கடலூரில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக ரூ.24 லட்சத்து 68 ஆயிரம் ஒதுக்கீடு செய்தார்.
இந்த நிதியில் இருந்து மாவட்டத்தில் 30 இடங்களில் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக கடலூர் உட்கோட்டத்தில் புதுப்பாளையம் சந்திப்பு, கடலூர் கிளை சிறைச்சாலை சந்திப்பு, மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, கடலூர் அரசு மருத்துவமனை, செல்லங்குப்பம் குறுக்கு ரோடு, கடலூர் மத்திய சிறைச்சாலை, ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் உள்ள வண்டிப்பாளையம் சந்திப்பு, திருவந்திபுரம் சாலக்கரை சந்திப்பு, கம்மியம்பேட்டை புறவழிச்சாலை சந்திப்பு உள்பட 12 இடங்களில் 36 கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் கிளைசிறைச்சாலை சந்திப்பில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்து, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் ஐ.ஜி.நாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குற்றங்களை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். தற்போது நகரில் 36 கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் 763 கேமராக்கள் பொருத்தி உள்ளோம்.
வணிக நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோரையும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தி உள்ளோம். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியபிறகு குற்றங்கள் குறைந்து வருகிறது. விபத்தும் குறைந்து வருவதை அறிய முடிகிறது. பள்ளி, கல்லூரிகள் முன்பும், பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தி வருகிறோம். குற்றங்களை தடுக்க பொதுமக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஐ.ஜி. நாகராஜன் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.சரவணன், உதயகுமார், காவல் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவியரசன், ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தையும், ஆயுதப்படை பிரிவையும் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் பார்வையிட்டு ஆவணங்களை ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story