திருவனந்தபுரம் அருகே கார் மோதி 2 வாலிபர்கள் சாவு - களியல் பகுதியை சேர்ந்தவர்கள்
திருவனந்தபுரம் அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். பலியான இருவரும் களியல் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அருமனை,
குமரி மாவட்டம் அருமனை அருகே களியல் மேல்பாரூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் சரத் (வயது 23). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் திருவனந்தபுரத்தில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவருடன் அதே ஊரை சேர்ந்த ஜெயசீலன் (24) என்பவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அங்கு நண்பரை பார்த்து விட்டு மீண்டும் ஊர் நோக்கி திரும்பினர். நேமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். விபத்தில் 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் களியல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story