புதிய பாலம் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு: பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்குவது எப்போது?


புதிய பாலம் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு: பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்குவது எப்போது?
x
தினத்தந்தி 26 Dec 2018 3:30 AM IST (Updated: 26 Dec 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்குவது எப்போது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வராததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனிடையே புதிதாக பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரெயில் பாலமாகும். கடலுக்குள் அமைந்துள்ள இந்த பாலம் அமைக்கப்பட்டு 104 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த நிலையில் இப்பாலத்தில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தில் கடந்த 4-ந்தேதி சில இடங்களில் விரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.

இருப்பினும் பாலத்தை முழுமையாக சீரமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்ததை தொடர்ந்து, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

பாம்பன் ரெயில்வே தூக்குப்பால பராமரிப்பு பணிகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கடலுக்குள் தவறி விழாமல் இருப்பதற்காக கயிறை கட்டிக்கொண்டு வேலை செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் தொங்கியபடி தூக்குப் பாலத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதை, ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் பாலத்தில் மீண்டும் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது பற்றி இதுவரையிலும் ரெயில்வே அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராமேசுவரம் வரை ரெயில் போக்குவரத்து இல்லாததால் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாம்பன் கடலுக்குள் தற்போதுள்ள ரெயில் பாலத்தின் அருகிலேயே ரூ.250 கோடி மதிப்பில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட உள்ளதாகவும், இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் ராமேசுவரம் தீவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை மக்கள் வரவேற்றுள்ளனர்.

இதுபற்றி ராமேசுவரத்தை சேர்ந்த சுற்றுச்சுழல் ஆர்வலர் தில்லைபாக்கியம் கூறுகையில், “ராமேசுவரம் வரை ரெயில்கள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பாம்பன் தூக்குப்பாலத்தில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் ராமேசுவரம் வரை ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பதை ரெயில்வே துறை அறிவிக்க வேண்டும். பாம்பன் கடலுக்குள் புதிதாக ரெயில்வே பாலம் கட்டப்பட இருப்பது வரவேற்கக்கூடியதாகும்“ என்றார்.

Next Story